இன்று இலங்கையில் முக்கியமான அரசியல் வரலாற்று நிகழ்வு நிகழவுள்ளது. ஆம் இலங்கையின் 9வது ஜனாதிபதியினை தெரிவு செய்யும் ஜனநாயகக் கடமையினை நாட்டு மக்கள் இன்றைய தினம் நிறைவேற்றிக் கொண்டிருக்கிறார்கள். நாட்டின் அனைத்துப் பகுதிகளிலும் ஜனாதிபதித் தேர்தலானது சூடு பிடித்துள்ளது. இலங்கையில் இன்றைய தினம் 7 மணியளவில் ஆரம்பமான ஜனாதிபதித் தேர்தலானது இன்று மாலை 5 மணியளவில் நிறைவடையும். அதனைத் தெடர்ந்து சில மணி நேரங்களில் வாக்கு எண்ணிக்கையிடல் ஆரம்பமாகும். இன்று நள்ளிரவு அல்லது நாளைக் காலை (ஞாயிற்றுக்கிழமை) நாட்டின் 9வது ஜனாதிபதி யாரென்பது உறுதிப்படுத்தப்படும்.
இலங்கை ஜனாதிபதித் தேர்தலானது விருப்ப வாக்கு எனும் அடிப்படையில் நடைபெறுகின்றது. அந்தவகையில் வாக்காளர்கள் தமது விருப்ப அடிப்படையில் 3 வேட்பாளர்களைத் தெரிவு செய்ய முடியும். இதனை அடிப்படையாகக் கொண்டு 50 சதவீதத்திற்கு மேல் வாக்குகளைப் பெற்றவர் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்படுவார். வேட்பாளர்கள் 50 சதவீத வாக்குகளைப் பெறாத சந்தர்ப்பத்தில் முதல் 2 இடங்களைப் பிடித்த வேட்பாளர்களின் விருப்ப வாக்குகள் எண்ணப்பட்டு அதில் அதிகமான வாக்குகளைப் பெற்றவர்கள் ஜனாதிபதியாக அறிவிக்கப்படுவார். இவ் ஜனாதிபதித் தேர்தலில் 17,140,354 வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளனர். அத்துடன் தேர்தலின் பொருட்டு 13,421 வாக்குச்சாவடிகள் நாடு முழுவதும் அமைக்கப்பட்டுள்ளன.
இன்றைய நாளில் 38 வேட்பாளர்கள் களத்தில் இருந்தாலும் நாட்டின் தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ மற்றும் அனுரகுமார திஸாநாயக ஆகியோருக்கிடையே மும்முனைப் போட்டியாக பெரும் போட்டி நிலவுகிறது. இலங்கை நாட்டின் 9வது ஜனாதிபதி யாரென்பது தொடர்பில் அறிய இன்னும் சில மணிநேரங்கள் காத்திருப்போம்.