இலங்கையில் தற்பொழுது ஆட்சியில் இருக்கும் மாண்புமிகு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மன்னார் நகரப் பகுதியில் புரட்டாதி 15ஆம் 2024 திகதி நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகையில் "விடுதலைப்புலிகளுடன் தொடர்பு பட்டு கைதாகி சிறையில் இருப்பவர்களை விடுதலை செய்ய முயற்சி செய்வதாகவும், மன்னாரை மேம்படுத்தி மன்னாரிலிருந்து திருகோணமலைக்கு புதிய பாதை ஒன்றை அமைப்பதும், அத்தோடு கமத்தொழிலை ஊக்குவிக்கவும், எம்மால் முடியும் எனவே 21 ஆம் திகதி நீங்கள் எமது ஆட்சி நிலைபெற வாக்களியுங்கள் நாம் வெல்வோம் என அவர் தெரிவித்துள்ளார்."
தற்பொழுது உள்ள ஆட்சியில் இதற்காகப் பயனுள்ள எவ்வித நடவடிக்கை எடுக்கப்படாததும், நாட்டின் பாதுகாப்புக்கு எவ்வித அச்சுறுத்தலும் அல்லது பிரஜைகளுக்கும் எவ்விதத்திலும் பங்கத்தினை விளைவிக்காதவர்களை, ஆட்சியாளர்கள் அல்லது அதற்குரிய அதிகாரிகள் தமது சுய லாபத்திற்காகப் பலரை சிறைக்கைதியாக்கினார்கள் என்பது இவ் உரையிலிருந்து தெளிவாகத் தெரிகின்றது, ஆட்சியாளர்களின் இவ்வாறான செயற்பாடு மிகவும் வேதனையாக உள்ளது. ஆட்சியாளர்களின் சுயலாபத்துக்காகவே விடுதலைப்புலிகளின் பெயரில் கைது செய்யப்பட்டுள்ளார்கள் மற்றும் நீண்ட காலமான சிறைவாசம் அனுபவிக்கின்றனர் என்பது மிக வருந்தத்தக்கதே. இவ்வாறான கைதிகள் விடுதலையானால் சிலரின் சுதந்திரம், நாட்டின் தேசிய பாதுகாப்பிற்கு மிகவும் பாதகம் ஏற்படுமென்று கடந்த காலங்களில் கருதப்பட்டதும் வெறும் வெளிப்பூச்சே அன்றி உன்மையானது இல்லை எனவும் அம்பலமாகின்றது. அல்லது அவ்வாறானவர்கள் விடுதலையானாலும் கண்காணிக்கப்படுவார் எனக்கூறினாலும் அது எவ்வளவேனும் சாத்தியமற்றதும், சுதந்திரமற்றதும், வீண் செலவீனமுமானதே.
மன்னாரிலிருந்து திருகோணமலைக்கு புதிய பாதை
தற்பொழுது காணப்படு போக்குவரத்துக்கான ஏறத்தாழ 170KM நீளமுடைய பாதை தற்போதைய தேவைகளுக்கு போதுமானதாக காணப்படினும் புதிய பாதை அமைக்கப்பட என்ன காரணம், அதற்கான செலவினை மன்னார் மாவட்டத்தின் வளர்ச்சிக்கான ஏற்பாடுகளைச் செய்வதே சாலச் சிறந்ததாகும், பாதைக்கான தேவைகள் அதிகரிப்பதற்கான எந்த செயற்பாடுகளும் இல்லாது இதனை செயற்படுத்துவது வீணான திட்டமாகவே காணப்படுகின்றது. மற்றும் மன்னார் மாவட்டத்திலுள்ள கடல், நில வளங்களை அங்கு வாழ்பவர்கள் தமது வாழ்வாதாரத்திற்குச் சுதந்திரமாகப் பயன்படுத்த அனுமதித்தாலே மன்னாரில் வாழ்பவர்களுக்கு போதுமானதாக அமையும் அல்லவா. செலவு செய்வதற்கு எவ்வாறோ பணம் உண்டு ஆனால் மன்னார் மாவட்டத்தின் வளர்ச்சிக்காக மட்டும் செலவு செய்ய விரும்பாததாகவே காண்பிக்கின்றது. அவர்களின் சுய முயற்சியினால் அவர்கள் தமது நகரினை கட்டுவதற்கு அரசியல்வாதிகளினால் எவ்வித இடையூறுகளுமின்றி கொண்டுசெல்ல வழிவிடவேண்டுமே அன்றி அரசியலின் சுய லாபத்திற்க்காகபயனற்ற வாக்குறுதிகளைக் கொடுப்பதும் முயற்சிகளைச் செய்யவிடாமல் தடுப்பதும் அவசியமற்றதே.
அத்தோடு கமத்தொழிலை ஊக்குவிக்கவும்
கமத்தொழில் ஊக்குவிப்பதற்குச் சரியான விதங்களில் அவர்கள் நிலங்களைப் பயன்படுத்தவும், சேதனப் பசளைகளைத் தாமாக வரியின்றி கொள்வனவு செய்ய அனுமதிப்பதும், (அவற்றை மீள் சந்தைப்படுத்துவோரின் விலை நிர்ணயத்திலும், பயன்பாட்டின் பாதுகாப்பிலும் மட்டும் அரசு பொறுப்பேற்று) விளைச்சல்களை அவர்களின் செலவிற்கமைவாக சந்தைப்படுத்த வைப்பதே அவசியமானதே. இவ்வாறான முன்னேற்றங்களுக்கான தடை காணப்படாமல் விட்டால் அவ் மாவட்ட மக்களே தமது நகரினை வளர்ச்சியடைய முயற்சி செய்வார்களே. இது மன்னார் மாவட்டத்திற்கு மட்டுமல்ல, தேசிய அளவில் சரிப்படுத்தப்படவேண்டியதே.
எமது வளங்களை எமது சுதந்திரத்தில் பயன்படுத்த அனுமதிப்பதே சிறந்ததே தவிர இவ்வாறான வாக்குறுதிகள் போலியானதே.